Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 30, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 18

                                                                        பசி  "கொடியது" !

கடைசி அப்ளிகேசனையும் கட்டி வைத்துவிட்டு  'அப்பாடா' என்று தோள்களைக் கைகளால் பிடித்துவிட்டபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள் கல்யாணி. கண்கள் கைக் கடிகாரத்தை நோட்டமிட்டது. மணி 1 . 45 . ஹாலில் அவளைத் தவிர மற்ற எல்லோருமே லஞ்சுக்கு போயிருந்தார்கள். ஹாலுக்குப் போவோமா வேண்டாமா என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டாள். இந்நேரம் எல்லோருமே கிட்டத் தட்ட சாப்பிட்டு முடித்திருப்பார்கள். அதனால் டேபிளில் உட்கார்ந்தே சாப்பிட்டு விடலாம் என்ற முடிவுடன், மேஜை மீது சிதறிக் கிடந்த  பைல்களை ஓரங்கட்டினாள். 
இன்னும் பத்து நிமிசத்தில் சாப்பிட்டு முடித்து விடணும். சரியா ரெண்டு மணிக்கு மேனேஜர் வந்து எட்டிப் பார்ப்பார். நாம ஒண்ணே முக்காலுக்குத் தான் சாப்பிட உட்கார்ந்தோம்கிறது அவருக்கு தெரியாது. சாப்பாடும் கையுமா நம்மைப் பார்த்தா எரிந்து விழுவார் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. காலையில் ரெண்டு மணி நேரம் அடுப்படியில் போராடி சமையலை முடிக்கிறோம். அதை உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரமில்லாதபடி என்ன ஒரு நாய்ப் பொழைப்பு என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
டிபன் பாக்ஸைத் திறந்தபோது " மேடம் " என்று குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
" என்னப்பா ? " - பசி எரிச்சலாய் வெடித்தது.
" அப்ளிகேசன் சப்மிட் பண்ணனும் " என்றான், வந்திருந்த இளைஞன் சிறிது தயக்கத்துடன். 
 " அப்ளிகேசன் வாங்கிக்கிறதுக்கான டைம் காலையில் பத்து மணிக்கே முடிஞ்சு  போச்சே".  
"சாரி மேடம்"
( "ஐயோ, எனக்கு எதையாவது சீக்கிரம் கொடேன்" என்று வயிறு அலறியது )
  " இந்த சாரிக்கு என்னப்பா அர்த்தம்"
 " சாரி மேடம் "
 " ஒரு போஸ்டுக்கு அப்ளை பண்றதுக்கே இவ்வளவு லேட்டா வர்றீங்களே, உங்களுக்கெல்லாம்  அப்பாயின்ட்மென்ட்  ஆர்டர் கொடுத்தா எத்தனை மணிக்கு ஆபீசுக்கு வருவீங்க? எத்தனை மணிக்கு வேலையை ஆரம்பிப்பீங்க ? "
 " சாரி மேடம்"
" ஏன் சார், உங்களுக்கு இந்த சாரியை விட்டா வேறு எந்த வார்த்தையுமே தெரியாதா?"   எரிந்து   விழுந்தாள்  கல்யாணி.
 "அப்ளிகேசனோடு சேர்த்து டெபாசிட் பணம் ஆயிரம் ரூபாய்க்கான டிமான்ட் டிராப்ட் வைக்கணும்னு  கன்டிஷன் போட்டிருந்தீங்க.. பணத்துக்குஏற்பாடு செய்வதில் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு".
அந்த இளைஞனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது கல்யாணிக்கு.
"என்னப்பா இது?  டியு டைம் முடிஞ்ச பிறகு வந்திருக்கீங்க, லஞ்ச் டைம் வேறே." என்ற கல்யாணி 'ஒரு அஞ்சு நிமிஷம் நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட முடிகிறதா?'  என்று தனக்குள் முணுமுணுத்தபடி அவன் நீட்டிய கவரை கையில் வாங்கினாள்.
 " தேங்க்ஸ் மேடம், ஒண்ணு  சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்கதானே?"
"சொல்லுப்பா"
" நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க!"
"எதை வச்சு சொல்றே?"
" உங்களுக்கு சாப்பாடு இருக்கு. சாப்பிட நேரமில்லை. எனக்கு அடுத்த வேளை சாப்பாடே கேள்விக் குறிதான்! " என்றான் சிறிதும் சலனமில்லாத குரலில் சிரித்தபடியே.
யாரோ நெஞ்சில் அடித்தது போன்றதொரு வலி. அந்த வலி கணப் பொழுதில் உடம்பு முழுக்க பரவியது. கல்யாணியின் கைகள், அவளையுமறியாமல், திறந்த பாக்சை மூடின.               









 

No comments:

Post a Comment